கொழும்பு,
இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.
இலங்கையில் கடந்த 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன.
இந்த தாக்குதலில் இலங்கையை சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், சர்வதேச அமைப்பின் உதவியுடன் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக இலங்கை மந்திரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இதை உறுதிப்படுத்தும்வகையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ். பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
அந்த இயக்கத்தின் அமக் செய்தி நிறுவனம் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஐ.எஸ். போராளிகள்தான் இந்த தாக்குதலை நடத்தினர். கிறிஸ்தவர்களையும், ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக சண்டையிடும் கூட்டணி நாடுகளை சேர்ந்த மக்களையும் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், மனித வெடிகுண்டாக செயல்பட்டவர்களுடன் தங்களுக்கு நேரடி தொடர்பு இருக்கிறதா? அல்லது தத்தமது நாடுகளில் தாக்குதல் நடத்துமாறு ஐ.எஸ். விடுத்த அழைப்பை ஏற்று இந்த தாக்குதல் நடந்ததா? என்பது பற்றி அந்த அறிக்கையில் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை.