கொழும்பு,
இலங்கையின் நிழல் உலக தாதாவாக இருந்தவர் அங்கொட லொக்கா (வயது 35). இவர் மீது இலங்கையில் பல்வேறு கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு போன்ற வழக்குகள் உள்ளன.
இவர் கடந்த 2018ம் ஆண்டு முதல் தலைமறைவாக கோவை சேரன்மாநகர் பகுதியில் தங்கியிருந்த நிலையில், கடந்த மாதம் 3ந்தேதி மாரடைப்பினால் இறந்தார். அவருடைய உடலை அவருடைய காதலி அம்மானி தான்ஷி, மதுரையை சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் மதுரைக்கு கொண்டு சென்று எரித்தனர்.
பிரதீப் சிங் என்பவர் பெயரில் போலியான ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டை தயாரித்து அங்கொட லொக்காவின் உடலை எரித்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு கோவை பீளமேடு போலீசாரிடமிருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை தாதாவின் காதலி அம்மானி தான்ஷி, சிவகாமி சுந்தரி மற்றும் தியானேஸ்வரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அங்கொட லொக்காவின் கூட்டாளியான அசித்த ஹேமதிலக்க இலங்கை போலீசார் நடத்திய என்கவுண்டரில் கடந்த 12ந்தேதி பலியானார். இந்நிலையில் அங்கொட லொக்காவின் மற்றொரு கூட்டாளியான சமிந்தா சந்தமால் எதிரிசூர்யா என்ற சமியா (வயது 41) போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் நேற்றிரவு சுட்டு கொல்லப்பட்டார்.