வாஷிங்டன்,
ரஷியா - உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி அலாஸ்காவில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் போர்நிறுத்தம் தொடர்பாக எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதனையடுத்து கடந்த 18-ந்தேதி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு டிரம்ப் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நாம் மக்களை இழக்கவில்லை, நாம் பணத்தை செலவு செய்யவில்லை, நமது ஆயுதங்களுக்கு பணம் கிடைக்கிறது. நேட்டோவுடன் நல்ல ஒப்பந்தத்தை செய்துள்ளோம். ஆனால் நாம் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பது ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மட்டும்தான் என்று பதிவிட்டார்.
இந்த நிலையில், ரஷியா-உக்ரைன் போர் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிரம்ப், உக்ரைன் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனெட்ஸ்க் பிராந்தியம் குறித்து ஜெலன்ஸ்கியிடம் நான் எதுவும் பேசவில்லை. ஆனால், அவர்கள் இப்போது செய்ய வேண்டியது என்னவென்றால், உக்ரைன் வீரர்கள் தற்போது இருக்கும் போர்முனைகளில் அப்படியே நின்றுவிட வேண்டும். இரண்டு தரப்பினரும் சண்டையை நிறுத்திவிட்டு வீட்டிற்குச் செல்ல வேண்டும். மக்களை கொல்வதை நிறுத்துங்கள், அனைத்தையும் நிறுத்திவிடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.