உலக செய்திகள்

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: முதல் முறையாக கருத்து தெரிவித்த சீனா

ஹார்முஸ் ஜலசந்தியில் இயல்பான போக்குவரத்தை பராமரிக்க வேண்டும் என சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

பீஜிங்,

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போர் நீடித்தது. கடந்த 7-ந்தேதி இரண்டு வார இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனிடையே, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

ஜலசந்தி மூடப்பட்டதன் விளைவாக, உலகம் முழுவதும், குறிப்பாக ஆசியாவில், கடுமையான எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், ஈரானிய எண்ணெயின் முக்கிய இறக்குமதியாளரான சீனாவுக்கு இந்த போரால் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் குறித்து சீனா முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானிடம் தொலைபேசியில் உரையாடிய போது சீன அதிபர் ஜின்பிங் கூறியிருப்பதாவது;-

“ஹார்முஸ் ஜலசந்தி ஒரு சர்வதேச நீர்வழித்தடமாகும். ஹார்முஸ் ஜலசந்தியில் இயல்பான போக்குவரத்தை பராமரிக்க வேண்டும். ஏனெனில் இது பிராந்திய நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பொது நலன் சார்ந்த விஷயமாக உள்ளது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.