துபாய்,
துபாய் போக்குவரத்து போலீஸ் துறையின் இயக்குனர் சைப் முகைர் அல் மஸ்ரூயி விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
துபாயில் ரமலான் மாதம் நேற்று தொடங்கியது. இதன் காரணமாக தினமும் இரவு நேரத்தில் பள்ளிவாசல்களில் தராவீஹ் எனப்படும் சிறப்பு தொழுகை நடைபெறும். இந்த தொழுகைக்காக வாகனங்களில் வருபவர்கள் தங்களது வாகனங்களை சாலையில் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. முறையாக வாகனங்களை நிறுத்தி விட்டு செல்ல வேண்டும். குடியிருப்புவாசிகள், மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக நிறுத்தக் கூடாது. அவ்வாறு முறையாக வாகனங்களை நிறுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுமட்டுமல்லாமல் ரமலான் மாதத்தில் விபத்துகள் நடப்பதை தடுக்கும் வகையில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் ரோந்து பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் போக்குவரத்து விதிகளை மதித்து செல்ல வேண்டும். குறிப்பாக அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்வது, வாகனங்களை முந்திச்செல்ல முயற்சிப்பது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். பொறுமையாகவும், நிதானமாகவும் வாகனங்களை ஓட்டிச் செல்வதன் மூலம் விபத்துக்களை தடுக்க முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.