உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் ஒரே நாளில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

தென் ஆப்பிரிக்காவில் அடுத்த 14 நாட்களுக்கு தீவிர ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்படும் என அந்நாட்டு அதிபர் சிரில் ரமாஃபோசா அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

கேப் டவுன்,

தென் ஆப்பிரிக்க நாட்டில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜனவரி மாதத்திற்கு பிறகு தற்போது மீண்டும் அங்கே தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தென் ஆப்பிரிக்க சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 122 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, தென் ஆப்பிரிக்காவில் அடுத்த 14 நாட்களுக்கு ஊரடங்கு விதிகள் தீவிரமாக பின்பற்றப்படும் என அந்நாட்டு அதிபர் சிரில் ரமாஃபோசா அறிவித்துள்ளார். ஏற்கனவே அங்கு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அடுத்த 14 நாட்களுக்கு ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து அதிபர் ரமாஃபோசா தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அளித்த பேட்டியில், சமூக பரவலை தடுக்க வேண்டும், அதே நேரம் நாட்டின் பொருளாதாரமும் காக்கப்பட வேண்டும். எனவே ஊரடங்கு விதிகளை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 14 நாட்களுக்கு பிறகு ஊரடங்கை தளர்த்தலாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

அதே சமயம் தென் ஆப்பிரிக்காவில் தற்போது கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 6 கோடி மக்கள் தொகையில், இதுவரை 27 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் தென் ஆப்பிரிக்காவிற்கு இதுவரை 14 லட்சம் பைசர் தடுப்பூசிகளும், 12 லட்சம் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு