பெய்ரூட்,
சிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அரசு ராணுவத்தினை பயன்படுத்தி வருகிறது.
உள்நாட்டு போர் சூழ்ந்த சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை அங்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் வன்முறைக்கு பலியாகி உள்ளனர்.
டமாஸ்கஸ் அருகே கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமா நகரை கைப்பற்ற ரஷ்ய ஆதரவு பெற்ற சிரிய அரசு படைகள் முற்றுகையிட்டு உள்ளன.
இந்த நிலையில், கிழக்கு கூட்டா பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான ரசாயன தாக்குதலில் 70 பேர் பலியாகி இருக்க கூடும் என கூறப்படுகிறது. புகலிடங்களில் வசித்த குடும்பத்தினர் உள்பட பலர் பலியாகி இருக்கலாம் என அமெரிக்க வெளியுறவு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெலிகாப்டர் ஒன்றின் வழியே சரீன் என்ற நச்சு ரசாயன பொருள் அடங்கிய வெடிகுண்டு வீசப்பட்டிருக்க கூடும் என அமெரிக்க தொண்டு அமைப்பு ஒன்று குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. எனினும் பலி எண்ணிக்கை 180ஐ தொட்டிருக்கும் என்றும், ஆனால் இரவு நேரம் மற்றும் தொடர் குண்டு வீச்சு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.