பெய்ரூட்,
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி பகுதியான கூட்டா பகுதியை மீட்டெடுத்தாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அதிபர் ஆதரவு படைகள் கடந்த ஒரு மாதமாக கடும் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.
இந்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருவது உலக நாடுகளையெல்லாம் அதிர வைத்தாலும், போர் நிறுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. சிரியா படைகள் நடத்தி வருகிற மூர்க்கத்தனமான வான்தாக்குதல்களில் இருந்து தப்பித்து உயிர் பிழைப்பதற்காக மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறியவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், அங்கு உள்ள ஜமால்கா நகரில் இருந்து இப்படி வெளியேறுவதற்காக ஒரு கூட்டத்தினர் புறப்பட்டு நின்றுகொண்டு இருந்தனர்.
அந்த நேரம் பார்த்து சிரியா அதிபர் படைகள் கடுமையான வான்தாக்குதலில் ஈடுபட்டன. அதில் அந்த கூட்டத்தினர் சிக்கினர். எங்கும் ஓட முடியாத படிக்கு குண்டு மழை பொழிந்ததில், 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தகவல்களை சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக சிரியா அரசு தகவல் எதுவும் வெளியிடவில்லை. அப்பாவி மக்கள் பலியாகிற போதெல்லாம் சிரியா அரசு, தாங்கள் கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்துத்தான் தாக்குதல் நடத்துவதாக கூறுவது தொடர்கதை ஆகி வருகிறது.