காபூல்,
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய பிறகு கெடுபிடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்கள். பல்கலைக்கழகங்களில், மாணவ, மாணவிகள் சேர்ந்து படிப்பதை தடுக்கும்வகையில், மாணவிகள் காலை நேரத்திலும், மாணவர்கள் பிற்பகல் நேரத்திலும் வர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்தநிலையில், இருபாலர் சேர்ந்து படிக்கும் முறையில் நேற்று புதிய உத்தரவை பிறப்பித்தனர். இதுகுறித்து உயர்கல்வி அமைச்சக செய்தித்தொடர்பாளர் அகமது தாகி கூறியதாவது:-
புதிய கால அட்டவணைப்படி, வாரத்தில் 3 நாட்கள் முழுக்க முழுக்க மாணவிகள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அந்த நாட்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
மீதி 3 நாட்கள் முழுக்க முழுக்க மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. காபூல் பல்கலைக்கழகத்தின் கல்வி கவுன்சில் தெரிவித்த யோசனைப்படி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவ, மாணவிகளுக்கு செய்முறை பயிற்சிகளுக்கும், அறிவியல் ஆராய்ச்சிக்கும் போதிய நேரம் கிடைக்கும். தற்போதைக்கு காபூல் பல்கலைக்கழகம், காபூல் பாலிடெக்னிக் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மட்டும் மே மாதத்தில் இருந்து இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று அவர் கூறினார்.