உலக செய்திகள்

துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் ஒரே நிலையில் நீண்ட நேரம் யோகாசனம் செய்து தமிழக பெண் உலக சாதனை

துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் இந்திய அரங்கில் ஒரே நிலையில் நீண்ட நேரம் யோகாசனம் செய்து தமிழக பெண் உலக சாதனை படைத்துள்ளார். மேலும் கின்னஸ் நிறுவன சாதனைக்கும் இது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

யோகா உலக சாதனை நிகழ்வு

துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் உள்ள இந்திய அரங்கத்தில் வர்த்தகம், கலை, கலாசாரம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமீரக தமிழ் தொழில் முனைவோர் நெட்வொர்க், இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, யோகா உலக சாதனை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியை அமீரக தமிழ் தொழில் முனைவோர் நெட்வொர்க்கின் தலைவரும், ஏ.எஸ்.பி. ஆடிட்டிங் மற்றும் அஸ்பா கன்சல்டன்சி நிறுவனத்தின் தலைவருமான ஆடிட்டர் பிரின்ஸ் என்கிற இளவரசன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழகத்தின் சிதம்பரம் நகரைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் அம்ருதா ஆனந்த், 22 நிமிடங்கள் ஒரே நிலையில் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்தார். இதன் மூலம் நீண்ட நேரம் யோகாசனத்தில் ஈடுபட்டதற்காக, ஆன்லைன் உலக சாதனை அமைப்பின் சார்பில் உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை

இந்த சாதனை சான்றிதழை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் பெங்களூரு கிளை தலைவர் விவேக், அம்ருதா ஆனந்த்திடம் வழங்கினார். மேலும் இந்திய துணைத் தூதரகத்தின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் வணிகத்துறை அதிகாரி கே.காளிமுத்து அவருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

அப்போது இந்திய துணைத் தூதரகத்தின் பத்திரிகை, தகவல், கலாசாரம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரி தது மமு, வெற்றிவேலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சி காணொலி காட்சி வழியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது

ஆன்லைன் உலக சாதனை அமைப்பின் இயக்குனர் பிலிப்ஸ் நடுவராக இருந்து இந்த யோகாசனம் நீண்ட நேரம் செய்யப்படுவதை காணொலி வழியாக பார்த்து உறுதி செய்தார். மேலும் இந்த சாதனை நிகழ்வை லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனமும் அங்கீகரித்துள்ளது.

மேலும் அம்ருதா ஆனந்த்தின் சாதனை, கின்னஸ் புக் ஆப் ரெகார்ட்ஸ் உலக சாதனை நிகழ்வுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உலக சாதனை படைத்த அம்ருதா ஆனந்த் யோகாசனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் அமீரகம், அமெரிக்கா மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களில் யோகா குறித்த சொற்பொழிவுகள், பயிற்சிகளையும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்