லண்டன்,
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த அனில் அகர்வால் என்ற இந்தியரின் வேதாந்தா குழுமம், கடந்த 1996-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் என்ற பெயரில் தாமிர ஆலையை திறந்தது. இதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட 1994-ம் ஆண்டு முதலே அங்கு போராட்டங்கள் தொடங்கின.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தற்போது விரிவாக்கப் பணியில் ஈடுபட்டு வருகிறது. அங்கு புதிய உருக்கு பிரிவு ஒன்றுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி இருக்கிறது. இது ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகி இருந்த மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இந்த ஆலையை மூடக்கோரி அங்கு போராட்டம் நடந்து வருகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் கலந்துகொண்டுள்ளனர். நேற்று முன்தினம் அங்கு நடந்த மிகப்பெரும் போராட்டம், கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவுபடுத்தியது.
தூத்துக்குடி மக்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக லண்டனிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அங்கு வசித்து வரும் ஏராளமான தமிழர்கள் வேதாந்தா குழுமங்களின் தலைவர் அனில் அகர்வாலின் மேபெயர் வீட்டுக்கு வெளியே குழுமி போராட்டம் நடத்தினர். அப்போது தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவியான பறையடித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியவர்களில் ஒருவரான மிரியம் ரோஸ் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை பல்வேறு துறைகளில் இருந்து பெறவேண்டிய அனுமதிகளை பெறாமல் தொடர்ந்து இயங்குகிறது. எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றனர். இதனால் உள்ளூர் மக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரங்கள் சீரழிகின்றன. எனவே இங்கிலாந்து அரசு ஸ்டெர்லைட்டுக்கு அளித்து வரும் ஆதரவை நிறுத்துவதுடன், லண்டன் பங்குச்சந்தை பட்டியலில் இருந்து அதை நீக்குவதற்கும் இதுவே தருணமாகும் என்று தெரிவித்தார்.
இதைப்போல ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கார்த்திக் என்பவர் கூறும்போது, இங்கிலாந்தில் வசிக்கும் பெரும்பாலான தமிழர்கள் ஆங்கிலேயரின் வாழ்க்கை முறையை எடுத்துக்கொண்டாலும், அவர்களின் எண்ணங்கள் அனைத்தும் தற்போதும் தமிழ்நாட்டை சுற்றிதான் இருக்கிறது. அவர்களின் நிலத்துக்கு ஏற்பட்டு இருக்கும் இந்த பாதிப்பால் அவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். எனவே இதுபோன்ற போராட்டங்களுக்கு நான் ஆதரவளிக்கிறேன் என்றார்.