காபூல்,
ஆப்கானிஸ்தானில் ஏறத்தாழ 20 ஆண்டு காலம் நடந்து வந்த உள்நாட்டுப்போரின் முடிவில், அந்த நாட்டை தலீபான் அமைப்பினர் தங்கள் வசப்படுத்தி உள்ளனர்.
துப்பாக்கிகளை கைப்பைகள் போல கைகளில் ஏந்திச்செல்கிற தலீபான்களால் அந்த நாட்டில் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற மரண பீதி மக்களிடையே இருக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக அங்கு பதற்றம் நீடிக்கிறது.
இதனால் வெளிநாட்டினர் மட்டுமல்லாது, உள்நாட்டினரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முடிவு செய்து, தலைநகர் காபூல் விமான நிலையத்தை நோக்கி படையெடுத்த வண்ணமாக உள்ளனர். 10 நாளில் ஏறத்தாழ 82 ஆயிரம் பேர் விமானங்கள் மூலம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி உள்ளனர். இன்னும் காபூல் விமான நிலையத்தினுள்ளும், வெளியேயும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இருக்கிறார்கள்.
இதற்கிடையே தலீபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி வெளிநாட்டுப்படைகள் 31-ந் தேதிக்குள் வெளியேறி ஆக வேண்டும். இதனால் அங்குள்ள தங்கள் நாட்டினரை மீட்கும் பணியில் பல்வேறு உலக நாடுகள் முழுவீச்சில் செயல்படுகின்றன.
ஆகஸ்டு 31 என்ற கெடுவை நீட்டிக்க முடியாது என தலீபான்கள் அறிவித்துள்ளனர். அதே நேரத்தில் வெளிநாட்டினரும், ஆப்கானிஸ்தானியர்களும் நாட்டை விட்டு வெளியேற 31-ந் தேதிக்கு பின்னரும் அனுமதிக்கப்படுவார்கள் என தலீபான்கள் கூறி இருப்பதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். ஆனாலும் தலீபான்களின் வாக்கு மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்ற கேள்வி எழாமல் இல்லை.
இந்த நிலையில் காபூல் விமான நிலையத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இது பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் கூறும்போது, ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். அமைப்பினரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள விமான போக்குவரத்து விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என குறிப்பிட்டார்.
ஆனால் அமெரிக்க விமானத்தில் வெளியேறுவதற்காக இன்னும் 10 ஆயிரம் பேர் காத்திருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது. மேலும் பல்லாயிரம் ஆப்கானிஸ்தானியர்கள், நாட்டை விட்டு வெளியேற விரும்பியும், அவர்களால் காபூல் விமான நிலையத்தை அடைய முடியவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என பல நாடுகளும், விமானநிலையத்துக்கு வெளியே உள்ள தங்கள் நாட்டினரை உடனடியாக அங்கிருந்து சென்றுவிடுமாறு அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
குறிப்பாக காபூல் விமான நிலையத்தின் அபே வாயில், கிழக்கு வாயில், வடக்கு வாயிலில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேறி விடுமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதே போன்ற அறிவுறுத்தலை இங்கிலாந்தும் விடுத்துள்ளது. அடுத்த அறிவுறுத்தல் வரும்வரையில் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிடுமாறு மக்களை கூறி உள்ளது.
ஆனால் எந்தவொரு நாடுமே ஐ.எஸ். பயங்கரவாதிகளினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து விரிவான தகவல்களை வெளியிடாததால் மக்கள் குழம்பிப்போய் உள்ளனர்.
இந்த சூழலில் அந்த விமான நிலைய பகுதியில் உள்ள பல்லாயிக்கணக்கானோரின் கதி என்னவாகும் என தெரியவில்லை.
தற்போது அந்த விமான நிலையம், 5,800 அமெரிக்க படையினராலும், 1,000 இங்கிலாந்து படையினராலும் பாதுகாக்கப்பட்டாலும், தாகத்துக்கு உதவாத கடல் தண்ணீர் நிலைதான் நிலவுகிறது.