உலக செய்திகள்

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நினைவு நாளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நினைவு நாளில் பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளதாக உள்நாட்டு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.

வாஷிங்டன்,

2001 செப்டம்பர் 11. அமெரிக்கர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலக மக்களாலும் மறக்க முடியாத நாள். வாஷிங்டனில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்துக்கு 81 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் புறப்பட்ட அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்திய அல்-கொய்தா பயங்கரவாதிகள், நியூயார்க்கின் அடையாள கோபுரமாக வானுயர நின்று கொண்டிருந்த உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது மோதி வெடிக்க செய்தனர்.

ஆங்கில திரைப்படங்களை விஞ்சும் அளவுக்கு நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டு பாதுகாப்பு அதிகாரிகளே உறைந்து போயிருந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் வாஷிங்டன் விமான நிலையத்தில் இருந்து 56 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் புறப்பட்ட மற்றொரு விமானத்தை கடத்தி இரட்டை கோபுரத்தின் தெற்கு கட்டிடத்தின் மீது மோதினர்.

இந்த தாக்குதல் நடந்த அதே நேரத்தில் ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் அல் கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர்.

அமெரிக்காவை நிலைகுலைய வைக்கும் அளவுக்கு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 3 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் நடந்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் 2011-ம் ஆண்டு மே 2-ந்தேதி பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் பதுங்கியிருந்த அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின் லேடனை அமெரிக்க அதிரடி படையினர் சுட்டு கொன்றனர்.

இதனிடையே அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11-ந்தேதி இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு இரட்டை கோபுர தாக்குதலின் 20-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் இந்தாண்டு இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினத்தின்போது அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அமெரிக்கா ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல் சூழலில் உள்ளது. இது பயங்கரவாதம், இன வெறுப்பால் தூண்டப்படும் வன்முறைகள் மற்றும் தொற்று நோய்களின்போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் கோபத்தை உள்ளடக்கியது.

இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் மற்றும் மத விடுமுறைகள் இலக்கு வைக்கப்பட்ட வன்முறை செயல்களுக்கு ஒரு ஊக்கியமாக அமையும் ஆபத்தான சூழல் உள்ளது.

உள்நாட்டு பயங்கரவாத அமைப்புகள் அமெரிக்காவின் சட்ட அமலாக்கத்துக்கு முன்னுரிமை அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.

மத மற்றும் இன வெறுப்பால் தூண்டப்பட்ட உள்நாட்டு பயங்கரவாதிகள் கடந்த காலங்களில் வழிபாட்டு தலங்கள் மற்றும் பிற கூட்டங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் இந்த இடங்களுக்கு நம்பகமான அல்லது உடனடி அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை.

பயங்கரவாத சித்தாந்த நம்பிக்கைகள் மற்றும் வெளிநாட்டு தாக்கங்களால் உள்நாட்டு பயங்கரவாதிகள் தூண்டப்படுவது தொடர்ந்து கவலை அளிப்பதாக உள்ளது.

இதுதவிர ரஷியா, சீனா மற்றும் ஈரானிய அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட ஊடகங்கள் கொரோனாவின் தோற்றம் மற்றும் தடுப்பூசியின் செயல்திறன் பற்றிய சதி கோட்பாடுகளை பரப்பி வன்முறைகளுக்கு வித்திட்டுள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.