உலக செய்திகள்

அபாயகரமான ஆபரேஷன்; தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறார்களை மீட்க அதிரடி

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறார்களை மீட்க அதிரடியாக ஒரு அபாயகரமான ஆபரேஷன் தொடங்கப்பட்டுள்ளது. #ThailandCaveRescue

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம் அங்கு வானிலை மாற்றம் நேரிட்டு கனமழை கொட்டியது. கனமழை காரணமாக 10 கி.மீ. நீளம் உடைய குகையில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் குகையை நீரும், சேறும் சூழ்ந்துள்ளது. இதனால் சுற்றுலா சென்ற சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரால் குகையை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்று அவர்கள் குகைக்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கியது.

குகையில் சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவு, ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உதவிகளை மீட்புப்பணி குழுவினர் அளித்து வரும் வேளையில், அவர்களை குகையிலிருந்து மீட்பதற்கான பணியில் சர்வதேச குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். தற்போது பல நாடுகளை சேர்ந்தவர்களும் உதவிக்கரம் நீட்ட, தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் தங்களது குடும்பத்திற்கு எழுதியுள்ள கடிதங்களை முக்குளிப்பவர்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.

அதில், ''கவலைப்படாதீர்கள்.. நாங்கள் தைரியமாக உள்ளோம்'' எனக் கூறி தங்களது பெற்றோர்களுக்கு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மழை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. குகையில் தண்ணீர் அளவு அதிகரிக்கவும் அச்சம் அதிகரித்தது. மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது. இதற்கிடையே குகைக்குள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதாலும், சிக்கியுள்ளவர்களின் உயிருக்கு ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் அனுப்பப்படுகிறது. இதற்கிடையே ஆக்ஸிஜன் பெட்டியை எடுத்து சென்ற தாய்லாந்து வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இதற்கிடையே குகையில் சிறார்கள் சிக்கியுள்ள பகுதிக்கு மேல் பகுதியில் துளையிட்டு அவர்களை காப்பாற்றுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் வானிலை மோசம் மற்றும் கனமழை ஆகியவை எல்லா வகையான மீட்பு பணிக்கும் சவாலாக எழுந்தது.

நீச்சலில் திறன் படைத்தவர்களை கொண்டு சிறுவர்களை முதுகில் சுமந்து கொண்டு வரலாமா? என்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

சிறுவர்களை உயிருடன் மீட்பது முக்கியம் என்பதால் அதிக கவனத்துடன் திட்டமிடப்பட்டு வந்தது. இந்நிலையில் இனியும் தாமதிப்பதில் அர்த்தமில்லை என்று மீட்பு படைகள் அதிரடி நடவடிக்கையை தொடங்கியுள்ளது. சிறார்களை பத்திரமாக வெளியே கொண்டுவரும் நடவடிக்கையை அதிகாரிகள் 'டி-டே' என அழைக்கிறார்கள். வெளியே வர சிறுவர்கள் பலமாகவும் தயாராகவும் உள்ளதாக கூறுகின்றனர்.

மாகாணத்தின் ஆளுநர் நரோங்சக் பேசுகையில், குகையில் சிக்கியுள்ளவர்களின் உடல்நிலை, நீரின் மட்டம் மற்றும் வானிலை போன்றவற்றை பார்க்கும்போது, தற்போது முதல் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் அவர்களை மீட்பதற்கான சிறப்பான சூழ்நிலை நிலவுகிறது" என்று கூறியுள்ளார். சிறுவர்கள் தற்போது ஒரு உலர்ந்த இடத்தில் உள்ளதாகவும், ஆனால் மழை தொடர்ந்து பொழியும் பட்சத்தில் அவர்கள் இருக்கும் இடத்தின் அளவு 108 சதுர அடிகளாக குறைவதற்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வானிலை காரணமாக சிறுவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாய்லாந்து மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள நீச்சல் வீரர்கள் இப்பணியில் இறங்கியுள்ளனர். சகதி கலந்த வெள்ள நீரில் நீந்தி சென்று, சிறுவர்களை மீட்கும் நடவடிக்கையை அவர்கள் தொடங்கியுள்ளனர். மீட்பு பணிக்காக அவசியம் அல்லாத ஊழியர்கள் சம்பவ இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். முக்குளிப்பவர்கள், மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் மட்டுமே அங்கு உள்ளனர்.

வெளிநாட்டை சேர்ந்த 13 முக்குளிப்பவர்கள் மற்றும் தாய்லாந்து கடற்படையை சேர்ந்த 5 முக்குளிப்பவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சூழ்நிலை "கச்சிதமாக" உள்ளதாக நரோங்சக் குறிப்பிட்டுள்ளார்.

ராட்ச இயந்திரங்களை கொண்டு குகையில் துளையிட்டு அங்குள்ள நீரை வெளியேற்றி, அவர்களை பத்திரமாக வெளியே அழைத்து வரும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...