லண்டன்,
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் பிரெக்ஸிட் மசோதா தாக்கல் செய்து, நாடாளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது. ஆனால் அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு அதில் தோல்வியடைந்தது. இதையடுத்து தெரசா மே கடந்த மாதம் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பிறகு இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக பிரெக்ஸிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இல்லையென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில், வரும் அக்டோபர் 31-ம் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவது உறுதி என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே அறிவித்திருந்தார். அக்டோபர் மாதம் 14-ம் தேதி வரை இங்கிலாந்து பாராளுமன்றத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு, பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் கோரிக்கையை ஏற்ற ராணி இரண்டாம் எலிசபெத், இங்கிலாந்து பாராளுமன்றத்தை அக்டோபர் 14-ம் தேதி வரை முடக்கி வைக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.