ஹூஸ்டன்,
அமெரிக்க நாட்டின் 41-வது ஜனாதிபதியாக 1989-1993 காலகட்டத்தில் பதவி வகித்தவர் ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ். இவர் சீனியர் புஷ் என்று அழைக்கப்பட்டு வந்தார். 94 வயதான நிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 10.10 மணிக்கு, ஹூஸ்டனில் மரணம் அடைந்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே வயோதிகத்தாலும், பார்கின்சன் நோயாலும் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் சக்கர நாற்காலியில்தான் வலம் வந்து கொண்டிருந்தார்
சீனியர் புஷ் மரண செய்தியை அவரது மகனும், அமெரிக்காவின் 43-வது ஜனாதிபதியாக பதவி வகித்தவருமான ஜூனியர் ஜார்ஜ் புஷ் அறிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், எங்கள் அன்புத்தந்தை, 94 ஆண்டுகள் சிறப்பாக வாழ்ந்த நிலையில் மரணம் அடைந்து விட்டார் என்பதை நானும் ஜெப், நீல், மார்வின், டோரா ஆகியோரும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவர் மிக உயர்ந்த குணம் படைத்தவர் மட்டுமல்ல, எங்களுக்கு சிறந்த தந்தையாகவும் திகழ்ந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
சீனியர் புஷ், இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்க கடற்படையில் விமானியாக பணியாற்றியவர். இவர் விமானத்தில் குண்டு போட சென்றபோது, ஜப்பானியர்களால் சுடப்பட்டு உயிர் தப்பியவர்.
திரைப்பட நடிகராக இருந்து அரசியலில் நுழைந்து ரொனால்டு ரீகன் ஜனாதிபதியான போது, சீனியர் புஷ் 2 முறை துணை ஜனாதிபதி பதவி வகித்துள்ளார்.
ஜனாதிபதியாக இருந்தபோது சர்வதேச ராணுவ கூட்டணியை ஏற்படுத்தி, குவைத் முற்றுகையை அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேன் கைவிட முக்கிய காரணமாக திகழ்ந்தவர் இவர்.
மக்கள் மத்தியில் 90 சதவீதம் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தவர், உள்நாட்டு பிரச்சினைகளை கவனிக்காமல் அசட்டையாக இருந்து விட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானார்.
அதன் விளைவாக 1992-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பில் கிளிண்டனிடம் தோல்வியைத் தழுவினார். 1988-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் புதிய வரி விதிக்க மாட்டேன் என வாக்குறுதி அளித்து விட்டு, அதில் இருந்து அவர் பின்வாங்கியது அவரது புகழுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இவரது மனைவி பார்பரா புஷ் மறைந்து 7 மாதங்கள் ஆன நிலையில், இப்போது சீனியர் புஷ் மரணம் அடைந்து உள்ளார். 94 வயது வரை வாழ்ந்த ஒரே அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி இவர் மட்டும்தான்.
இந்த தம்பதியருக்கு மொத்தம் 6 குழந்தைகள். தற்போது 5 குழந்தைகள், 17 பேரக்குழந்தைகள், 8 கொள்ளுப்பேரக்குழந்தைகள் உள்ளனர்.
சீனியர் புஷ் இறுதிச்சடங்கு பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என அவரது செய்தி தொடர்பாளர் ஜிம் மேக்ரத் கூறினார்.
சீனியர் புஷ் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்தியில், முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ் மறைவுக்கு நாடே துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. அதில் நானும், மனைவி மெலனியாவும் இணைந்து கொள்கிறோம். பொதுச் சேவைக்கு பல தலைமுறைகளாக அமெரிக்கர்கள் வருவதற்கு அவர் தூண்டுகோலாக திகழ்ந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
1992 தேர்தலில் சீனியர் புஷ்சை வீழ்த்திய முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், அவரது நீண்ட கால சேவை வாழ்க்கைக்கு, அன்புக்கு, நட்புக்கு நன்றி செலுத்துகிறோம். அவரோடு நான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்துக்காகவும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். எனது வாழ்வின் மிகப்பெரிய பரிசாக எங்கள் நட்பை எப்போதுமே கருதினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, அமெரிக்கா தனது தேசபக்தரை, தாழ்மையான ஊழியரை இழந்து விட்டது. எங்கள் இதயம் கனத்துப்போய் உள்ளது என கூறி உள்ளார்.