வாஷிங்டன்,
சீனாவில் உருவான உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தற்போது உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவை தவிர்த்து இதுவரை 72 நாடுகளில் சுமார் 11 ஆயிரம் பேர் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த நோயிக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில் நோய் பரவலை தடுக்க உலக நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
எனினும் இந்த கொடிய நோய் உலகம் முழுவதும் உயிர் பலிகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் சீனாவுக்கு அடுத்தப் படியாக அதிக பட்சமாக இத்தாலியில் 100-க்கும் மேற்பட்டோரும், ஈரானில் 92 பேரும் பலியாகி இருக்கிறார்கள்.
இதனிடையே கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் வேகமாக பரவி வருகிறது. அந்த நாட்டின் 16 மாகாணங்களில் கொரோனா பரவியிருக்கும் சூழலில் உயிர் பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அங்கு இந்த உயிர்க்கொல்லி நோயால் 10 பேர் பலியான நிலையில், நேற்று முன்தினம் கலிபோர்னியா மாகாணத்தில் 71 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆனது.
இதையடுத்து, வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலிபோர்னியா அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாகாண கவர்னர் கவின் நியூசோம் பிறப்பித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த அவசர நிலை பிரகடனம், கொரோனா வைரஸ் பரவலை மட்டுப்படுத்த நமது மக்களுக்கும், சுகாதார பாதுகாப்பு துறைக்கும் பெரிதும் உதவும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனாவால் உயிரிழந்த முதியவர் மெக்சிகோவில் இருந்து கடந்த மாதம் 21-ந்தேதி கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு திரும்பிய கிராண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் பயணம் செய்தவர் என தெரியவந்துள்ளது.
தற்போது சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அந்த கப்பலில் இருந்து ஏற்கனவே சுமார் 1,000 பயணிகள் இறங்கிவிட்ட நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இன்னும் கப்பலில் இருக்கிறார்கள்.
அவர்கள் கப்பலில் இருந்து இறங்குவதற்கு தடைவிதித்துள்ள கலிபோர்னியா மாகாண அரசு கப்பலை தனிமைப்படுத்தி வைத்துள்ளது. அடுத்த 2 வாரங்களுக்கு கப்பல் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கலிபோர்னியாவை தொடர்ந்து, அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலும் கொரோனா எதிரொலி காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.