கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் கூச்பேகர் மாவட்டம் சிடால்குச்சி என்ற இடத்தில் நேற்று பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசியதாவது:-
மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த 2 கட்ட தேர்தல்களில் மக்கள் பெருமளவு திரண்டு வந்து வாக்களித்துள்ளனர். அதை பார்க்கும்போது, பா.ஜனதா ஆட்சி அமைக்கப்போவது உறுதியாக தெரிகிறது. மம்தா அரசு வீழ்த்தப்படும். 2 கட்ட தேர்தல் நடந்த 60 தொகுதிகளில் பா.ஜனதா 50 தொகுதிகளாவது வெற்றி பெறும்.
அதுபோல், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோற்பது உறுதி. வடக்கு பகுதி வங்காளத்துக்கு மம்தா பானர்ஜி எதுவுமே செய்யவில்லை. அதனால்தான் இங்கு போட்டியிட அவர் விரும்பவில்லை. சிடால்குச்சியில் சாலை அமைக்க மோடி அரசு ரூ.22 கோடி அளிக்க முன்வந்தது. ஆனால், அதை மம்தா அரசு பயன்படுத்தவில்லை. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், மாமூல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.