வாஷிங்டன்,
அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகள் 90 சதவீதம் செயல் திறன் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விநியோகிக்க, சிப்லா நிறுவனத்திற்கு, அவசரகால அடிப்படையில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.
சிப்லா நிறுவனம் இறக்குமதி செய்யும் மாடர்னா தடுப்பூசிகள் அனைத்தும் மத்திய அரசுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு, பின்னர் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.
இந்த தடுப்பூசியை ஒரு மாத காலத்திற்கு 2 முதல் 8 டிகிரி வெப்பத்தில் சேமித்து வைக்க முடியும். ஆனால் 7 மாதம் வரை சேமித்து வைக்க மைனஸ் 20 டிகிரி குளிர்பதன சேமிப்பு பெட்டிகள் தேவைப்படும்.
இரண்டு டோஸ்கள் கொண்ட மாடர்னா தடுப்பூசிகளை, 28 நாட்கள் இடைவெளியில் செலுத்த வேண்டும்.பெரும் நகரங்களில், குளிர் பதன சேமிப்பு வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஜூலை 15 முதல் மாடர்னா தடுப்பூசி விநியோகம் தொடங்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.