உலக செய்திகள்

இலங்கை கடற்பகுதியில் எண்ணெய் கப்பலில் பிடித்த தீ இந்தியா உதவியுடன் அணைக்கப்பட்டது

இலங்கை கடற்பகுதியில் எண்ணெய் கப்பலில் பிடித்த தீ இந்தியா உதவியுடன் அணைக்கப்பட்டது.

தினத்தந்தி

கொழும்பு,

பனாமா நாட்டுக்கு சொந்தமான நியூ டைமண்ட் என்ற எண்ணெய் கப்பல் குவைத்தில் இருந்து 2,70,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு இந்தியா வந்து கொண்டிருந்தது. இதில் மாலுமி, பொறியாளர்கள் என 23 ஊழியர்கள் இருந்தனர். இதில் 18 பேர் பிலிப்பைன்சையும், 5 பேர் கிரேக்கத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த கப்பல் இலங்கையின் கிழக்கு பகுதியில் அம்பாரா மாவட்டத்துக்கு உட்பட்ட சங்கமன்கண்டா கடற்பகுதியில் கடந்த 3-ந் தேதி வந்தபோது திடீரென கப்பலின் என்ஜின் அறையில் இருந்த கொதிகலன் வெடித்தது. இதனால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பிலிப்பைன்சை சேர்ந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த கப்பல் விபத்து குறித்த தகவல் அறிந்ததும் இலங்கை கடற்படை கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. மேலும் அவர்களுக்கு விமானப்படையினரும், துறைமுக அதிகாரிகளும் தீயை அணைக்க உதவி செய்தனர்.

கப்பலில் பிடித்த தீயை அணைக்க நீண்ட நேரம் போராடியும் அவர்களால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. எனவே இந்தியாவின் உதவியை இலங்கை நாடியது.

இதைத்தொடர்ந்து இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான சரங், சுஜய் உள்ளிட்ட கப்பல்களும், டோர்னியர் விமானம் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டது. இவ்வாறு கப்பலில் பிடித்த தீயை அணைக்க இரவு பகலாக வீரர்கள் போராடினர்.

இந்த நீண்ட போராட்டத்தின் பலனாக கப்பலில் பிடித்த தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அத்துடன் இழுவை படகு ஒன்றின் மூலம் கப்பல் ஆழ்கடல் பகுதிக்கும் நகர்த்தப்பட்டு உள்ளது.

இந்தியாவின் கடற்படை மற்றும் கடலோர காவல்படை மற்றும் தங்கள் விமானப்படை, துறைமுக அதிகாரிகளின் உதவியால் கப்பலில் பிடித்த தீ அணைக்கப்பட்டதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது. மேலும் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு எதுவும் ஏற்படவில்லை எனவும் இலங்கை கடற்படை கூறியுள்ளது.

எண்ணெய் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதால் இலங்கை கடற்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்