வாஷிங்டன்,
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதனை எதிர்கொள்ள கார்பனை அதிக அளவில் உமிழும் எரிசக்திகளுக்கு பதிலாக தூய எரிசக்திகளுக்கு (மாற்று எரிசக்தி) உலக நாடுகள் மாற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் சூரிய ஒளி எரிசக்தி உள்பட மாற்று எரிசக்திகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் காலநிலை மாற்றத்துக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஜான் கெர்ரியின் மூத்த ஆலோசகரான ஜொனாதன் பெர்ஷிங் நாடாளுமன்றத்தில் பேசியபோது மாற்று எரிசக்தியில் தீவிர கவனம் செலுத்துவதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அவர் பேசுகையில் இந்தியாவில் கொரோனா நெருக்கடியால் எழுந்திருக்கும் கடுமையான சவால்கள் இருந்த போதிலும், தூய்மையான எரிசக்தி மாற்றத்தை ஏற்படுத்துவதில் பிரதமர் மோடியின் தொடர்ச்சியான கவனத்தை நாங்கள் வரவேற்கிறோம். பாராட்டுகிறோம். 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதற்கான இந்தியாவின் இலக்கை அடைய தேவையான முதலீட்டை தூண்டுவதற்கு ஒழுங்குமுறை மற்றும் சந்தை நிலைமைகளை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பு ஒரு முக்கிய மையமாக இருக்கும். அந்த இலக்கு எட்டப்பட்டால் இந்தியா அதன் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பசுமை வாயு உமிழ்வு பாதை இரண்டிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உணரும் என கூறினார்.