வெளியுறவு கொள்கைகள் குறித்து உரை
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ந்தேதி பதவியேற்றார். அப்போது முதல் அவர் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அதிரடியாக மாற்றியமைத்து வருகிறார்.இந்த நிலையில் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக தனது நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் உரையாற்றினார். அப்போது அவர் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளில் பல்வேறு மாற்றங்களை அறிவித்தார்.
சீனாவுடனான அமெரிக்காவின் உறவு குறித்து பேசிய ஜோ பைடன் சீனா முன்வைக்கும் சவால்களை அமெரிக்கா நேரடியாக எதிர்கொள்ளும். அதேசமயம் அமெரிக்காவின் நலன்களை பூர்த்தி செய்ய சீனா ஒப்புக்கொண்டால் சீனாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயங்காது என கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
சீனாவுடன் இணைந்து பணியாற்ற தயார்
சீனாவின் பொருளாதார அத்துமீறல்களை நாங்கள் எதிர்கொள்வோம். மனித உரிமைகள் அறிவுசார் சொத்துகள் மற்றும் உலகளாவிய ஆளுமை மீதான சீனாவின் தாக்குதலை பின்னுக்கு தள்ளுவதற்காக சீனாவின் ஆக்ரோஷமான மற்றும் வலுக்கட்டாயமான நடவடிக்கைகளை எதிர்கொள்வோம்.அதேசமயம் அமெரிக்காவுக்கு நன்மைபயக்குமானால் சீனாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக உள்ளோம்.
உள்ளுக்குள்ளேயே சிறப்பாக கட்டியெழுப்புவதன் மூலமும், எங்கள் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலமும், சர்வதேச நிறுவனங்களில் எங்கள் பங்களிப்பை புதுப்பிப்பதன் மூலமும், எங்கள் நம்பகத்தன்மை மற்றும் தார்மீக அதிகாரத்தை மீட்டெடுப்பதன் மூலமும் பலத்தின் நிலையிலிருந்து நாங்கள் போட்டியிடுவோம்.அதனால்தான் அமெரிக்க ஈடுபாட்டை சர்வதேச அளவில் மீட்டெடுக்க தொடங்குவதற்கும், பகிரப்பட்ட சவால்களில் உலகளாவிய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான எங்கள் தலைமைத்துவ நிலையை மீண்டும் பெறுவதற்கும் நாங்கள் விரைவாக நகர்ந்துள்ளோம்.
இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.
ரஷியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்
அதனைத் தொடர்ந்து ரஷியாவுடனான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை குறித்து பேசிய ஜோ பைடன் ரஷியாவின் விரோத நடவடிக்கைகளை எதிர்கொள்ள அந்த நாட்டின் மீது அதிக அழுத்தம் கொடுக்க அமெரிக்கா தயங்காது என்று எச்சரித்தார். மேலும் சிறை வைக்கப்பட்டுள்ள ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதுபற்றி அவர் பேசுகையில் ரஷிய அதிபர் புதினுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரஷியாவின் விரோத நடவடிக்கைகளை கண்டும் காணாமல் இருந்த அமெரிக்காவின் நாட்கள் முடிந்துவிட்டன. முந்தைய ஜனாதிபதியிடமிருந்து மிகவும் மாறுபட்ட அணுகுமுறையை நீங்கள் என்னிடம் பார்ப்பீர்கள். எங்களது முக்கிய நலன்களையும் எங்களது மக்களையும் பாதுகாக்க ரஷியா மீது அதிக அழுத்தம் கொடுக்க நாங்கள் தயங்க மாட்டோம் என்றார்.
மேலும் அவர் அரசியல் ரீதியாக அலெக்சி நவால்னியை சிறை வைத்தது, கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்டங்களை நசுக்குவதற்கான ரஷியாவின் முயற்சிகள் அமெரிக்காவுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஆழ்ந்த கவலை அளிக்கிறது. எனவே நவால்னி, உடனடியாகவும் எந்த வித நிபந்தனையுமின்றியும் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.