உலக செய்திகள்

காஷ்மீர் பிரச்சினையில் 3-வது நாட்டின் சமரசத்துக்கு இடமில்லை - அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டம்

பிரான்ஸ் நாட்டில் அமெரிக்க ஜனாதிபதியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, காஷ்மீர் பிரச்சினையில் 3-வது நாட்டின் சமரசத்துக்கு இடமில்லை என டிரம்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார்.

தினத்தந்தி

பியாரிட்ஸ்,

நாடு விடுதலையடைந்தது முதலே இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரம் தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது.

அந்த அழகான பிராந்தியத்தை அடைய பாகிஸ்தான் தீராத வேட்கையுடன் இருப்பதால் இந்த பிரச்சினை நீண்டுகொண்டே செல்கிறது. ராணுவ நடவடிக்கை, சமாதான பேச்சுவார்த்தை என பல வழிகளை கையாண்ட பின்னரும் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியவில்லை.

இதனால் அங்கு பயங் கரவாதம், எல்லை தாண்டிய ராணுவ தாக்குதல் என பல்வேறு நரித்தனங் களை பாகிஸ்தான் தூண்டி விட்டு வருகிறது. மறுபுறம் காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சு நடத்த வாருங்கள் என இந்தியாவிடம் அந்த நாட்டு தலைவர்கள் கெஞ்சுகின்றனர்.

ஆனால் காஷ்மீர் பள்ளத் தாக்கில் பயங்கரவாதம் ஓய்ந்து அமைதி திரும்பினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என இந்தியா உறுதியுடன் இருக்கிறது.

இதற்கிடையே காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுமாறு சர்வதேச நாடுகளையும், ஐ.நா. போன்ற அமைப்புகளுக் கும் பாகிஸ்தான் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் இருநாட்டு பிரச்சினை என்பதால் 3-ம் நபர் இதில் தலையிட அனுமதிக்க முடியாது என இந்தியா திட்டவட்டமாக கூறி வருகிறது.

எனினும் கடந்த மாதம் அமெரிக்க பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் வேண்டுகோள் விடுத்ததாக தெரிகிறது.

அதை ஏற்று காஷ்மீர் விவகாரத்தில் சமசரம் செய்ய தயார் என டிரம்பும் அறிவித்தார். ஆனால் இதை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்தது.

இந்த சூழலில்தான் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தையும் சர்வதேச அரங்குக்கு எடுத்துச்சென்ற பாகிஸ்தான், உலக நாடுகளின் ஆதரவு கிடைக்காமல் மூக்குடைபட்டது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நடவடிக்கை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனவும், இதை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறிய மத்திய அரசு இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்த நிலையில் பிரான்சின் பியாரிட்ஸ் நகரில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் அந்த நாட்டுக்கு சென்றார். பின்னர் மாநாட்டுக்கு இடையே ஜி-7 நாடுகளின் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி பேசினார்.

இதில் முக்கியமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து இரு தலைவர்களும் பேசினர். அப்போது பிரதமர் மோடி, காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சினை. இதில் 3-வது நாட்டின் சமரசத்துக்கு இடமில்லை என டிரம்பிடம் திட்டவட்டமாக கூறினார்.

பின்னர் நேற்று மீண்டும் இரு தலைவர்களும் அதிகாரபூர்வமாக சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினர்.

குறிப்பாக அமெரிக்காவில் இருந்து 4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.28 ஆயிரம் கோடி) அளவுக்கு இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நிலையில், அதை அதிகரிப்பது குறித்து இரு தலைவர்களும் பேசினர். மேலும் பிரதமர் மோடி அடுத்த மாதம் (செப்டம்பர்) அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன், இருநாடுகளுக்கு இடையே நிலவும் வர்த்தக பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர வர்த்தக மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

பின்னர் இருவரும் இணைந்து செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்தும், அதில் 3-வது நாட்டின் தலையீடு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பிரதமர் மோடி பதிலளித்தபோது கூறியதாவது:-

இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏராளமான இருதரப்பு பிரச்சினைகள் உள்ளன. இது இயற்கையானதுதான். இதில் 3-வது நாட்டை தொந்தரவு செய்ய நாங்கள் விரும்பவில்லை. இவற்றை நாங்களே விவாதித்து தீர்வுகாண எங்களால் முடியும். 1947-ம் ஆண்டுக்கு முன்னால் நாங்கள் ஒரே நாடாக இருந்தோமென்றால், எங்களுக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு தற்போதும் தீர்வுகாண எங்களால் முடியும் என நம்புகிறேன்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை தொடர்பு கொண்டு நான் பேசினேன். அப்போது இந்தியாவும், பாகிஸ்தானும் வறுமை, எழுத்தறிவின்மை மற்றும் பெரிய பிரச்சினைகளுக்கு எதிராக போராட வேண்டிய தேவையுள்ளது எனவும், நமது வேறுபாடுகளை களைந்து இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

பின்னர் டிரம்ப் கூறும்போது, காஷ்மீர் குறித்து நாங்கள் நேற்று (நேற்று முன்தினம்) இரவு விரிவாக பேசினோம். அங்கு நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக பிரதமர் மோடி உண்மையிலேயே நம்புகிறார். அவர்கள் (இந்தியா) பாகிஸ்தானுடன் பேசுகிறார்கள். இந்தியாவும்-பாகிஸ்தானும் இணைந்து காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என நான் நம்புகிறேன். அது மிகவும் நல்லதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்த டிரம்ப், பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தைக்கு பின் அதில் இருந்து பின்வாங்கியதன் மூலம் தற்போது இந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு