ரோம்,
இத்தாலி நாட்டின் வடக்கே பீட்மோன்ட் நகரில் ஸ்ட்ரெஸ்சா என்ற கிராமத்தில் மேகியோர் என்ற ஏரி ஒன்று அமைந்துள்ளது. இதன் கரை பகுதியில் இருந்து மோட்டரோன் என்ற மலை குன்று பகுதிக்கு செல்ல கேபிள் கார் வசதி உள்ளது.
கொரோனா ஊரடங்கால் இந்த பகுதி வழியேயான கேபிள் கார் பயண சேவைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன் ஊரடங்கு தளர்வுகளால் இந்த கேபிள் கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், மலை பகுதிக்கு 10 பேருடன் சென்ற கேபிள் கார் 985 அடி உயரத்தில் இருந்தபொழுது திடீரென விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 5 வயது பச்சிளம் குழந்தை உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேபிள் காரில் அவசர காலத்திற்கு பயன்படுத்தப்படும் பிரேக் மீது இரும்பு க்ளாம்ப் ஒன்று வைக்கப்பட்டிருந்ததால், விபத்து ஏற்பட்ட சமயத்தில் பிரேக் பிடிக்காமல் போனதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.