சிட்னி,
ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தனியார் நிறுவனம் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்க அந்த நிறுவனம் வினோதமான முறையை கையாண்டது. சிறிய அளவிலான பரிசுப்பொருட்கள் வைத்து ஊதப்பட்ட நூற்றுக்கணக்கான பலூன்கள் மொத்தமாக அந்தரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அந்த பரிசு பொருட்களை எடுப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு திரண்டிருந்தனர்.
அப்போது அந்த பலூன்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் அவிழ்த்து விடப்பட்டன. அந்தரத்தில் பரிசு பொருட்களுடன் பறந்த பலூன்களை பிடிப்பதற்காக மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனாலும் மக்கள் அதனை பொருட்படுத்தாமல் பலூன்களை பிடிப்பதில் தீவிரம் காட்டி தொடர்ந்து முன்னேறியதால் கடும் நெரிசல் உருவானது.
இதில் சுமார் 20 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.