சியோல்,
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ச்சியாக அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததால் வடகொரியா சர்வதேச நாடுகளின் கோபத்துக்கு ஆளானது.
குறிப்பாக வடகொரியாவை அமெரிக்கா நேரடியாக எதிர்த்தது. இந்த விவகாரத்தில் ஜப்பான் மற்றும் தென்கொரியா அமெரிக்காவுக்கு பக்கபலமாக இருந்தன.
வடகொரியாவுக்கு எதிராக மேற்கூறிய 3 நாடுகளின் ராணுவமும் ஒன்றிணைந்து கொரிய தீபகற்ப பகுதியில் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வந்தன.
இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் முதல் முறையாக சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை கைவிட்டுவிட்டு, அமைதிக்கு திரும்பியது.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா-வடகொரியா இடையே நடந்த 2-வது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் இருநாடுகள் இடையே மீண்டும் மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
தென்கொரியா மற்றும் ஜப்பான் அமெரிக்கா பக்கம் இருக்கும் நிலையில், தமக்கும் வலிமையான கூட்டாளிகள் உண்டு என்று காட்டும் வகையில் வடகொரியா, ரஷியா உடனான உறவை பலப்படுத்த முடிவு செய்தது.
அதன்படி வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், வரலாற்றில் முதல் முறையாக ரஷியாவுக்கு சென்று அந்நாட்டின் அதிபர் புதினை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் ரஷியா-வடகொரிய உறவை மேம்படுத்த இருதரப்பிலும் உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது. அத்துடன் கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க ரஷியா தன்னால் முடிந்த உதவியை செய்யும் என புதின் உறுதியளித்தார்.
இந்த நிலையில், அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் ஆகிய 3 நாடுகளும், 10-வது முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்த முடிவு செய்துள்ளன.
இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை வருகிற 9-ந் தேதி தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெறுகிறது. இதில் 3 நாடுகளின் ராணுவ மந்திரிகள், உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என தெரிகிறது.
இந்த பேச்சுவார்த்தையின்போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவதில் 3 நாடுகளின் பங்களிப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு குறித்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.