உலக செய்திகள்

இந்தியாவுக்கான வர்த்தக சலுகையை பறிக்க டிரம்ப் முடிவு - 60 நாள் நோட்டீஸ் கொடுத்தது, அமெரிக்கா

40 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவுக்கு வழங்கி வரும் வர்த்தக சலுகையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முடிவுக்கு கொண்டு வருகிறார். இதையொட்டி, இந்தியாவுக்கு அமெரிக்கா 60 நாள் நோட்டீஸ் கொடுத்தது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அரசியல், ராணுவ உறவுகள் நல்ல நிலையில் உள்ளன. அவற்றில் இரு நாடுகள் இடையே இணக்கமான சூழல் உள்ளன. ஆனால் வர்த்தக ரீதியில் இந்தியா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்காவில் நடந்த பழமைவாத அரசியல் நடவடிக்கை மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசியபோது, அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிகபட்ச வரி விதிப்பதாக சாடினார்.

1970-களில் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடாக திகழ்ந்து வந்த இந்தியாவை அமெரிக்கா ஜி.எஸ்.பி. என்று அழைக்கப்படுகிற பொதுவான முன்னுரிமை திட்டத்தின் கீழ் சேர்த்தது. இந்த திட்டத்தின்கீழ் அமெரிக்காவிடம் வர்த்தக ரீதியில் சலுகை பெற்று அதிக பலன் அடைகிற நாடாக இன்றளவும் இந்தியா விளங்கி வருகிறது.

கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து அமெரிக்கா 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரத்து 470 கோடி) பொருட்களை சுங்க வரி விதிக்காமல் இறக்குமதி செய்தது.

இந்த நிலையில்தான், ஜி.எஸ்.பி. திட்டத்தின் கீழ், இந்தியாவுக்கு வழங்கி வரும் வரி சலுகையை முடிவுக்கு கொண்டுவர எண்ணி உள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். இதையொட்டி இந்தியாவுக்கு அமெரிக்கா நேற்று 60 நாள் நோட்டீஸ் வழங்கியது.

இதற்கிடேயே அமெரிக்கா எழுப்பி உள்ள கோரிக்கைகள் மீது தீர்வு காண்பதற்கு இந்தியா முன்வந்துள்ளது. இதை மத்திய வர்த்தக துறை செயலாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு வழங்கி வருகிற வர்த்தக சலுகையை ஒருவேளை அமெரிக்கா பறித்து விட்டால், அது இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது பொருளாதார வல்லுனர்களின் கருத்தாக அமைந்துள்ளது.

ஆனாலும் இந்தியாவுக்கு வழங்கி வருகிற வர்த்தக சலுகையை டிரம்ப் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில் வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்