ஹனோய்,
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பினை மீறி வடகொரியா அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பில் அணு ஆயுத பரிசோதனைகளை நடத்துவதில்லை என்று வடகொரியாவும், அந்நாட்டுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவோம் என அமெரிக்காவும் ஒப்புதல் வழங்கின.
இதையடுத்து, இருநாட்டு தலைவர்களும் மீண்டும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. பல கட்ட ஆலோசனைக்கு பிறகு வியட்நாம் தலைநகர் ஹனோயில் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சந்திப்பு 2 நாட்கள் நடைபெறும் என முடிவானது.
இந்நிலையில், வியட்நாமின் ஹனோய் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் நேற்றிரவு சந்தித்தனர். பின்னர் பரஸ்பரம் கை குலுக்கிக்கொண்டனர். இருநாட்டு தலைவர்கள் வருகையை முன்னிட்டு வியட்நாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், வியட்நாம் நாட்டில் உள்ள ஹனோய் நகரில் மெட்ரோபோல் ஓட்டலில் இன்று 2வது நாளாக இருதரப்பு சந்திப்பு தொடங்கியது.
இதில், டிரம்ப் மற்றும் கிம் நேருக்கு நேர் சந்தித்து 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ, வடகொரிய தொழிலாளர் கட்சிக்கான மத்திய குழுவின் துணை தலைவர் கிம் யாங் சோல், அணு ஆயுத ஒழிப்பு பேச்சுவார்த்தைக்கான வடகொரிய தலைமை பேச்சாளர் மற்றும் கிம்மின் நெருங்கிய உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.