அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வடகொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த முயற்சி செய்ய வேண்டாம் எனவும் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் பிரச்சினையை சுமுகமாக தீர்க்க பலகட்ட முயற்சிகள் மேற்கொண்டும் அது தோல்வியில் முடிந்துள்ளன.
தற்போது வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் நேரடியாக ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர்.இதனால் இருநாடுகளுக்கிடையே போர் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உலகநாடுகள் உள்ளன.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன், கொரிய தீபகற்பத்தில் நிலவிவரும் பரபரப்பான சூழ்நிலை குறித்து வடகொரிய ஜனாதிபதியுடன் அணு ஆயுத சோதனைகளின் திட்டங்களை கைவிடுவது குறித்து நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயற்சிப்பதாகவும், ஆனால் வடகொரியாவோ இந்தப் பேச்சுவார்த்தைக்கு இணக்கம் காட்டவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், ரெக்ஸ் டில்லர்சன் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணலாம் என்று எடுக்கும் முயற்சியின் மூலம் நேரத்தைத்தான் வீணாக்குகிறார்.
உங்கள் நேரத்தை சேமித்துக் கொள்ளுங்கள் , என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.