வாஷிங்டன்,
இரு கொரிய எல்லைகளை பிரிக்கும் அமைதி இல்லத்தில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடனான சந்திப்பு நடைபெறலாம் என டொனால்டு டிரம்ப் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, தென்கொரியா நாடுகளை அச்சுறுத்தல் வகையில் அணு ஆயுத பரிசோதனை மற்றும் கண்டம் கண்டம் விட்டு பாயக்கூடிய ஏவுகணை சோதனை ஆகியவற்றை வடகொரியா நடத்தியது. இதற்கு ஐ.நா. அமைப்பும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் தொடர்ந்து வடகொரியா ஏவுகணை பரிசோதனைகளை நடத்தியது.
இந்த நிலையில், தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், வடகொரியாவின் நிலைப்பாட்டில் பல மாற்றங்களை உருவாக்கின. தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை வடகொரியா கடைப்பிடிக்க தொடங்கியது.
தொடர்ந்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் என கிம் கூறினார். அதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் தென்கொரியா தெரிவித்தது. உடனே அவரும் கிம் ஜாங் அன்னை சந்திக்க தயார் என கடந்த மாதம் அறிவித்தார்.
இந்நிலையில், இரு நாட்டுத்தலைவர்களும் நேரடியாக சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா கைவிடும் என்றும் அணு ஆயுத தளங்கள் மூடப்படும் என்றும் கிம் தென்கொரிய அதிபரிடம் கூறியுள்ளார் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வடகொரிய தலைவர் கிம் அன்னுடனான சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு பல்வேறு நாடுகள் கவனத்தில் கொள்ளப்பட்டு உள்ளன.
ஆனால் வட மற்றும் தென் கொரியா நாடுகளை பிரிக்கும் எல்லை பகுதியில் அமைந்த அமைதி இல்லம் ஆனது 3வது நாட்டை விட அதிக பிரதிநிதித்துவம் பெற்ற, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.