வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது அரசியல் எதிரியான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது ஊழல் விசாரணை நடத்த உக்ரைன் நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாக எழுந்த புகாரில் அவர் பதவி நீக்க விசாரணையை எதிர்கொண்டு உள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் பிரதிநிதிகள் சபையில் டிரம்புக்கு எதிரான பதவி நீக்கம் தீர்மானம் நிறைவேறியது. தற்போது அந்த தீர்மானம் டிரம்பின் குடியரசு கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட செனட்சபையில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் உள்ளிட்ட மேலும் சில சாட்சிகளை விசாரிக்க வேண்டுமென ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தினர்.
செனட்சபையில் இருக்கும் 100 உறுப்பினர்களில் 51 பேர் ஆதரவு அளித்தால் மட்டுமே சாட்சியை விசாரணைக்கு அழைக்க முடியும். ஆனால் அங்கு ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சாட்சியை விசாரணைக்கு அழைக்க குடியரசு கட்சி உறுப்பினர்கள் 4 பேரின் ஆதரவு தேவையாகிறது. ஆனால் குடியரசு கட்சியினர் யாரும் ஆதரவு அளிக்கவில்லை. இது ஜனநாயக கட்சியினருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் செனட் சபையின் மூத்த உறுப்பினரான குடியரசு கட்சியை சேர்ந்த லாமர் அலெக்சாண்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி டிரம்ப் பொருத்தமற்ற முறையில் நடந்து கொண்டார் என்பதை ஜனநாயக கட்சியினர் நிரூபித்துள்ளனர். அதே சமயம் அவர் பதவி நீக்கம் செய்யப்படும் அளவிலான குற்றத்தில் ஈடுபட்டார் என்பதை நிரூபிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு பதவிநீக்க விசாரணையில் இருந்து டிரம்பை செனட்சபை விடுவிப்பதற்கு வழி வகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.