அங்காரா
வெள்ளியன்று ஈராக் நாட்டின் குர்திஷ் தலைவர் மசூத் பர்சானி விடுதலைக் கோரும் பொது வாக்கெடுப்பு வடக்கு ஈராக்கில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
இந்த பொது வாக்கெடுப்பை தள்ளி வைக்கச் சொல்லி அமெரிக்கா உட்பட பல மேலை நாடுகள் கோரியுள்ளன. இப்போது நடைபெறவுள்ள பொது வாக்கெடுப்பு பாக்தாத்திற்கும், குர்திஷ் பகுதிக்கும் இடையே பதற்றத்தை உருவாக்கி இன்னும் சில பகுதிகளில் வலுவாக இருக்கும் ஐஎஸ் இயக்கத்திற்கு சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பது அவர்களின் கவலை. எனவே இந்த பொது வாக்கெடுப்பை ஒத்தி வைக்காததற்கு துருக்கிய பிரதமர், அதிபர் எர்டோகன் ஆகியோர் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வாக்கெடுப்பு துருக்கியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பதால் துருக்கி இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஜெர்மனிக்கு எர்டோகன் கண்டனம்
ஜெர்மன் நாட்டின் கலோன் நகரில் குர்திஷ் போராளி இயக்கமான பிகேகேவின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படுவோர் சுமார் 25,000 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அப்போது சிறையிலுள்ள இயக்கத்தின் தலைவர் அப்துல்லா ஓக்லானின் புகைப்படம் ஒட்டிய பதாகைகளையும் சிலர் ஏந்தியிருந்துள்ளனர். பிகேகே ஐரோப்பாவிலும், ஜெர்மனியிலும் பயங்கரவாத இயக்கம் என்று கருதப்பட்டு தடை செய்யப்பட்டதாகும். இந்த ஆர்ப்பாட்டம் எர்டோகனுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ளதால் ஜெர்மன் தூதுவரை அழைத்து துருக்கி கடுமையான வார்த்தைகளால் கண்டித்துள்ளது.