வாஷிங்டன்,
உலகின் முன்னணி கார் நிறுவனங்களில் டெஸ்லாவும் ஒன்று. டிரைவர் இல்லாமல் மென்பொருள் தன்னிச்சையாக இயங்கும் வகையில் தானியங்கி கார்களை டெஸ்லா நிறுவனம் உருவாக்கி வருகிறது.
எதிர்கால நோக்கத்த்தோடு, அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்படும் இந்த வகை கார்கள் உலக அளவில் மிகவும் பிரபலமாகி வருகின்றன. பல்வேறு அம்சங்கள் நிரம்பிய இந்த வகை கார்கள் மிகவும் பாதுகாப்பானது எனவும் கருத்துக்கள் நிலவி வருகின்றன.
இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் கார் மரத்தின் மீது மோதி தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் டெஸ்லா காரில் பயணித்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹேரிஸ் மாகாணத்தில் டெஸ்லா நிறுவனத்தின் 'எஸ் மாடல் காரில் நேற்று இரண்டு ஆண்கள் பயணித்துள்ளனர்.
வளைவான சாலையில் திரும்ப முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக கார் சாலையை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தின் மீது பயங்கரவேகத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதன் பின் உடனடியாக கார் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேரும் உடல்கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடல்களை மீட்டு பிரேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விபத்து நடந்தபோது காரை யாரேனும் ஒட்டினரா? அல்லது டிரைவர் இல்லாமல் தன்னிச்சையாக இயங்கும் நடைமுறை அம்லபடுத்தப்பட்டிருந்ததால் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆனால், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ் அதிகாரி மார்க் ஹேர்மென் கூறுகையில், சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் கார் மரத்தின் மீது மோதும்போது டிரைவர் இருக்கையில் யாரும் இல்லை என்பது தெரியவந்துள்ளது என்று கூறினார்.
ஆனால், தன்னிச்சையாக இயக்கப்பட்டதால் தான் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் கருத்துக்கு டெஸ்லா நிறுவன தலைவர் எலன் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின் அடிப்படையில் காரின் தன்னிச்சை இயக்கம் செயல்படுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது. இந்த கார் முழுமையான தானியங்கு இயக்கத்தை வாங்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக டெஸ்லா நிறுவனம் சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.