டோக்கியோ,
கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல் ஜப்பான் கடலில் தனிமைப்படுத்தி நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. கப்பலை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் காலக்கட்டம் நேற்றுடன் முடிவடைந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாதவர்களும், வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களும் கப்பலை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 3,700 பேர் நேற்று கப்பலை விட்டு வெளியேறினர்.
இந்த நிலையில், கடந்த வாரம் கப்பலில் இருந்து வெளியேறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜப்பானை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்ததாக ஜப்பான் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்த இருவரும், 80 வயதை நெருங்கிய முதியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கப்பலில் மீதம் இருப்பவர்கள் அடுத்த இரண்டு நாட்களில் வெளியேற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.