துபாய்,
அமீரகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரமலான் மாதத்தை முன்னிட்டு முதல் முறையாக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், உலகில் வாழும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மாதம் முழுவதும் ஒரு கோடி இலவச உணவுகளை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டில் 10 கோடி உணவு பொருட்களை வழங்கும் திட்டமாக அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டம் குறித்த இலக்கை விட கடந்து அதிக அளவில் நன்கொடைகள் பெறப்பட்டு பல்வேறு மக்களுக்கு உணவு பொருட்கள் சென்றடைந்தது. இந்த முயற்சிக்காக முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உலகளாவிய முயற்சிகளின் கீழ் பிரத்யேக இணையதள முகவரி ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது.
இதன் மூலம் பொதுமக்கள் குறைந்தபட்சம் 10 திர்ஹாமில் இருந்து 500 திர்ஹாம் வரை நன்கொடை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுமக்கள், சமூக சேவகர்கள், கார்ப்பரேட் வர்த்தக நிறுவனங்கள், அறக்கட்டளைகள், பொதுமக்கள் என அனைவரும் பங்களிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது
எஸ்.எம்.எஸ் மூலம் பெறப்பட்ட நன்கொடை மட்டும் கடந்த ஆண்டில் ஒரு கோடியே 10 லட்சம் திர்ஹாமாகும். அதேபோல் இந்த திட்டத்தின் வங்கி கணக்கில் பெறப்பட்ட நிதியின் அளவு 4 கோடி திர்ஹாமாகும்.
தற்போது நடப்பு ஆண்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதி ரமலான் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்த ஆண்டின் இலக்கானது 100 கோடி உணவு வழங்க அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேற்று அறிவிப்பை வெளியிட்டார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சகோதர, சகோதரிகளே! இன்று உலகம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு 100 கோடி உணவு வழங்கும் திட்டத்தை அறிவிக்கிறோம். இது புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து இலக்கை அடையும் வரை வரும் ஆண்டுகளிலும் தொடரும். அதன் குறிக்கோள், வயிறு நிரம்பி உறங்குபவர்கள் அண்டை வீட்டார் பசியோடு இருப்பார்கள் என நம்புவதில்லை.
இன்றைய காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் சுமார் 80 கோடி மக்கள் பட்டினியால் அவதிப்படுகிறார்கள். இதன் காரணமாகவே மனிதநேயத்துடன் நமது மார்க்கமும் இணைந்து உதவிக்கரம் நீட்டுவதற்கு ஊக்குவிக்கிறது. உண்மையில் சிறந்த கொடை என்பது உணவு அளிப்பதாகும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.