ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்தி கொண்டிருக்கிறது மியான்மர் ராணுவம். ஆனால் மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சியை ஏற்க மறுத்து கடந்த 5 மாதங்களாக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை மியான்மர் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் 900-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், அமைதியான வழியில் போராடும் அப்பாவி மக்கள் மீது வன்முறையை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் மியான்மர் ராணுவத்துக்கு சர்வதேச நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதுதொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகளும் ஐரோப்பிய கூட்டமைப்பும் மியான்மர் ராணுவம் மீது ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த நிலையில் மியான்மர் ராணுவத்துக்கு கிடைத்து வரும் பல கோடி ரூபாய் வருவாயை முடக்கும் விதமாக ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் இங்கிலாந்து அரசு மியான்மார் ராணுவத்தின் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
அதன்படி மியான்மரின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை குறை மதிப்புக்கு உட்படுத்துவது மற்றும் அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான 8 தனிநபர்கள் மீதும், மியான்மர் ராணுவத்துக்கு அதிகப்படியான வருவாய் ஈட்டித்தரும் 3 நிறுவனங்கள் மீதும் ஐரோப்பிய கூட்டமைப்பு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மியான்மர் ராணுவத்தின் வருவாய்க்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களிக்கும் நிறுவனங்களை குறி வைப்பதன் மூலம் மியான்மரின் இயற்கை வளங்களில் இருந்து லாபம் ஈட்டும் ஆட்சி குழுவின் திறன் கட்டுப்படுத்தப்படுகிறது. அதேநேரத்தில் மியான்மர் மக்களுக்கு தேவையற்ற தீங்கு விளைவிப்பதை தவிர்ப்பதும் இந்த பொருளாதார தடைகளின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோபோல் இங்கிலாந்து, மியான்மர் ராணுவத்துடன் தொடர்புடைய 4 அரசு நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. இந்த 4 நிறுவனங்களும் மியான்மர் ராணுவத்துக்கு அதிகப்படியான லாபம் ஈட்டித் தரக்கூடியவை என கண்டறியப்பட்ட பின்பு அவற்றின் மீது இங்கிலாந்து அரசு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதுபற்றி இங்கிலாந்து வெளியுறவு மந்திரி டொமினிக் ராப் கூறுகையில் இன்று அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் மியான்மரின் ஆட்சியின் பொருளாதார நலனை இலக்கு வைக்கும். இந்த நடவடிக்கை ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து ராணுவ ஆட்சியை முடுக்கிவிடும் நிதி உதவியை இங்கிலாந்து அனுமதிக்காது என்று ராணுவ ஆட்சிக்குழுவுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது என கூறினார்.