லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்துள்ளது. 2 மனைவிகளையும் விவகாரத்து செய்த இவர், கேரி சைமண்ட்ஸ் என்ற பெண்ணுடன் காதல் வயப்பட்டார்.
திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த இந்த ஜோடி திருமணத்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் அறிவித்தது. மேலும் கோடை கால ஆரம்பத்தில் தங்களுக்கு குழந்தை பிறக்கும் என்றும் அவர்கள் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கேரி சைமண்ட்சுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் இறுதியில் லண்டன் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. நல்ல முறையில் பிரசவம் பார்த்த டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் போரிஸ் ஜான்சனும், கேரி சைமண்ட்சும் நன்றி தெரிவித்து கொண்டனர்.
அதற்கு முன்பு கொரோனா பாதித்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போரிஸ் ஜான்சன், கடந்த ஆண்டு ஏப்ரல் இறுதி திங்கட்கிழமையில் தொற்றில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பினார்.
இதன்பின் இந்த ஆண்டு மே மாதத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது 3வது மனைவியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது மனைவிக்கு வரும் டிசம்பரில் 2வது குழந்தை பிறக்கும் என கூறப்படுகிறது. இதுபற்றி கேரி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செய்தியில் உறுதிப்படுத்தி உள்ளார். வருகிற கிறிஸ்துமசில் 2வது குழந்தை பிறக்க கூடும் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.