லண்டன்,
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனால், தலைநகர் லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் நான்கு அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய வகை வைரஸ்தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், இங்கிலாந்துடனான விமானப் போக்குவரத்தை பல்வேறு நாடுகளை ரத்து செய்துள்ளன.
தலைநகர் லண்டனில் பெரிய மருத்துவமனைகள் படுக்கை பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் புதிய வகை வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளதால் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சமாக, ஒரே நாளில் 58,784 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 27,13,563 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 407 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 75,431 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே தற்போதைய ஊரடங்கு அடுக்கு முறை கட்டுப்பாடுகளைவிட கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என விஞ்ஞானிகள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து தற்போது 5-வது இடத்தில் உள்ளது.