கிவ்,
உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா நேற்று உக்ரேனிய வான்வெளியை விமானங்கள் பறக்க தடை மண்டலமாக அறிவிக்க நேட்டோவுக்கு அறிவுறுத்தினார். மேலும் செர்னிஹிவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் விழுந்த வெடிக்கப்படாத வெடிகுண்டின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
ரஷியப் படைகள் நாட்டை ஆக்கிரமித்ததில் இருந்து கடந்த 11 நாட்களில் ஆயிரக்கணக்கான உக்ரைன் குடிமக்களின் உயிர்களை பல வெடிகுண்டுகள் சிதறடித்துள்ளன என்று சுட்டிக்காட்டினார். இரத்தம் சிந்துவதைத் தடுப்பதற்கான ஒரே வழி, உக்ரைனின் வான்வெளியை மூடுவது அல்லது நாட்டுக்கு போர் விமானங்களை வழங்குவதுதான் என்றார்.
இதுகுறித்து டிமிட்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த பயங்கரமான 500 கிலோ ரஷிய வெடிகுண்டு செர்னிஹிவ் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் விழுந்து வெடிக்கவில்லை. பல அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் ரஷிய காட்டுமிராண்டிகளிடமிருந்து எங்கள் மக்களைப் பாதுகாக்க எங்களுக்கு உதவுங்கள்! வானத்தை மூட எங்களுக்கு உதவுங்கள். எங்களுக்கு போர் விமானங்களை வழங்குங்கள். என்று கூறியுள்ளார்.