கீவ்,
உக்ரைனில் ஒரு மாதத்தை கடந்து ரஷியாவின் போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் வீடு வாசல் இழந்து அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
40 நாட்களை தாண்டிய பின்னரும், போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதற்கு இணையாக உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் உக்ரைன் ராணுவமும் பொதுமக்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இருபக்கமும் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இருநாட்டு பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில், உக்ரைனில் உள்ள கள நிலவரத்தை சில புகைப்படங்கள் வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.
சின்னஞ்சிறு குழந்தைகளின் முதுகு மற்றும் உடலின் பிற பகுதிகளில், அவர்களுடைய குடும்பத்தினரின் தொடர்பு விவரங்களை அந்த குழந்தைகளின் தாய்மார்கள் எழுதி வெளியிட்டுள்ள படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
போர் முழக்கங்களுக்கு மத்தியில், உயிரை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் வாழும் உக்ரைன் தாய்மார்கள், தங்கள் சிறு குழந்தைகளின் உடல்களில் குடும்ப விவரங்களை எழுதத் தொடங்கியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் குழந்தைகளின் இந்த அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி காண்போரின் இதயத்தை நொறுக்கி வருகிறது.
போரின் துயரங்கள் மற்றும் கள யதார்த்தத்தை முன்னிலைப்படுத்த விரும்பும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்களால் அவை பகிரப்படுகின்றன.
கீவ் இன்டிபென்டன்ட் பத்திரிகையாளர் அனஸ்தேசியா லாபடினா ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு குழந்தையின் முதுகில் அதன் தாயார், பெயர் மற்றும் டெலிபோன் எண் உள்ளிட்ட விவரங்களை எழுதியுள்ளார்.
அவர் உக்ரேனிய தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் உடல்களில் தங்கள் குடும்பம் பற்றிய விவரங்களை தொடர்புகளை எழுதுகிறார்கள். ஒருவேளை தாங்கள் கொல்லப்படலாம் என அஞ்சி இவ்வாறு செய்கின்றனர். அப்போது தங்கள் குழந்தைகள் உயிரோடு இருந்தால் விவரம் அறிந்திட இவ்வாறு செய்கின்றனர்.
ஆனால், ஐரோப்பிய நாடுகள் இன்னமும் ரஷியாவிடம் எரிபொருள் வாங்குவதை பற்றி பேசி கொண்டிருக்கின்றன என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த புகைப்படத்தை அந்த சிறுமியின் தாய் சாஷா மகோவி மூன்று நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இதனை அவர் பதிவிடும்போது, ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், இவளை யாராவது வரவேற்றுக் கொள்ளுங்கள் என்று உக்ரேனிய மொழியில் குறிப்பிட்டு பதிவிட்டார்.
ரஷியப் படைகள் தப்பிச் செல்ல முயன்றபோது குழந்தைகளை "மனிதக் கேடயங்களாக" பயன்படுத்தினர் என்று தி கார்டியன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.