நியூயார்க்,
ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நேற்று தொடங்கியது. அதில், உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் பங்கேற்றார்.
ஐ.நா. பொதுச்சபையின் பொது விவாதத்தில் அவர் பேசுகையில், இந்தியாவுக்கு புகழாரம் சூட்டினார். 100 கோடி மக்களுக்கு மேல் வாழும் சுதந்திரமான நாடு, இந்தியா. பல லட்சம்பேரை, வறுமையின் பிடியில் இருந்து இந்தியா வெற்றிகரமாக விடுவித்துள்ளது என்று டிரம்ப் பேசினார்.
சவுதி அரேபியா அமல்படுத்தி வரும் துணிச்சலான சீர்திருத்தங்களையும் டிரம்ப் பாராட்டினார். அவர் 35 நிமிட நேரம் பேசினார்.
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், வழக்கமாக, முதலில் பிரேசில் நாட்டு அதிபரும், இரண்டாவதாக அமெரிக்க ஜனாதிபதியும் பேசுவார்கள். ஆனால், நேற்றைய கூட்டத்துக்கு டொனால்டு டிரம்ப் காலதாமதமாக சென்றதால், அவர் இரண்டாவதாக பேசும் வாய்ப்பை தவற விட்டார். மூன்றாவதாக அவர் பேசினார்.