முனிச்,
ஜெர்மனியின் முனிச் நகரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை மந்திரிகள் பங்கேற்றுள்ள முனிச் பாதுகாப்பு மாநாடு இன்று நடந்தது. இந்த மாநாட்டில், அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மார்கோ ரூபியோ கலந்து கொண்டு பேசும்போது, ஐ.நா. அமைப்பை கடுமையாக விமர்சித்து பேசினார்.
அவர் கூறும்போது, உலகளவில் நடந்த மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதில் ஐ.நா. அமைப்பு தோல்வியை அடைந்து விட்டது என கூறினார்.
நம் முன்னால் உள்ள அதிக அழுத்தத்திற்குரிய விவகாரங்களில், ஐ.நா. அமைப்பிடம் எந்த பதிலும் இல்லை என்பதிலும், அது தீர்வு ஏற்படுத்துவதில் எந்த பங்கும் வகிக்கவில்லை என்பதனை நாம் இன்று தவிர்த்துவிட்டு சென்று விட முடியாது. உக்ரைன் போருக்கு அது தீர்வு காணவில்லை.
ஆனால், அவர்கள் இருதரப்பினரையும் அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர முடிந்ததில் அமெரிக்காவுக்கு பெரும் பங்கு உள்ளது. 2025-ம் ஆண்டின் இறுதியிலும், 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலும் ரஷியாவையும், உக்ரைனையும் அமைதி பேச்சுவார்த்தைக்கு கொண்டு வந்ததில் அமெரிக்கா வெற்றி கண்டு உள்ளது.
வேறு எந்த சர்வதேச அமைப்புகளும் அதனை செய்யவில்லை என்றார். இதேபோன்று, காசா போரை தீர்க்கவும் ஐ.நா.வால் முடியவில்லை. காட்டுமிராண்டிகளிடம் இருந்து பணய கைதிகளை விடுவித்து கொண்டு வந்ததும் அமெரிக்காதான் என்று பேசினார்.
எனினும், உலகில் நல்ல விசயங்களை செய்வதற்கான மிக பெரிய சக்தியை ஐ.நா. அமைப்பு தன்னுள் இன்னும் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.