வாஷிங்டன்,
ரஷியாவின் தலையீட்டை டிரம்ப் தொடர்ந்து மறுத்து வந்து உள்ளார்.
இந்த நிலையில், விசாரணையில் தான் பாரபட்சமான முடிவு எடுப்பதை தவிர்க்கிற வகையில், அந்த நாட்டின் அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ், இந்த விசாரணை தொடர்பான பொறுப்பில் இருந்து விலகினார். அந்த பொறுப்பை அவர் தனக்கு அடுத்த நிலையில் உள்ள ராட் ரோசன்ஸ்டெயினிடம் ஒப்படைத்தார்.
இது அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதை சாடிய அவர், ஜெப் செசன்ஸ் கட்டுப்பாட்டில் அவரது துறை இல்லை என்று கூறினார்.
இந்த கருத்தால் டிரம்புக்கும், ஜெப் செசன்சுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. டிரம்புக்கு ஜெப் செசன்ஸ் பதிலடி கொடுத்து உள்ளார். இது பற்றி அவர் குறிப்பிடுகையில், நான் தலைமை தாங்கி வருகிற நீதித்துறையானது, எந்த விதமான அரசியல் நிர்ப்பந்தங்களுக்கும் அடி பணியாது. நான் என்றைக்கு அட்டார்னி ஜெனரல் பதவியை ஏற்றுக்கொண்டேனோ, அந்த நாள் முதல் நீதித்துறை என் கட்டுப்பாட்டில் வந்து விட்டது என கூறி உள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த மோதலால் ஜெப் செசன்சை டிரம்ப் நீக்குவாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது. ஆனால் நவம்பர் மாதம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர்தான் இதில் டிரம்ப் முடிவு எடுப்பார் என கூறப்படுகிறது.