ஜெனீவா,
வடகொரியா கடந்த சில ஆண்டுகளாகவே அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவை தாக்கும் விதமாக ஏவுகணை சோதனைகளை நடத்துகிறது. இதனால் ஐ.நா. சபை பல்வேறு பொருளாதார தடைகளை வடகொரியா மீது விதித்துள்ளது.
இருப்பினும், இதற்கெல்லாம் கட்டுப்படாத வடகொரியா தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், நேற்று ஜப்பான் வான்வழியாக பறந்து செல்லும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. இது ஜப்பானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஏவுகணை ஜப்பான் வழியாக பறப்பது குறித்து கேப் எரிமோ நகரில் தொடர்ந்து பொது மக்களுக்கு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதனால் பல லட்சம் ஜப்பானியர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.
வடகொரியாவின் அத்துமீறிய செயலுக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது ஐநா மனித உரிமை கவுன்சிலும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமை கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகொரியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். வடகொரியா இது போன்ற செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.