வாஷிங்டன்,
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஜெர்மனிக்கான அமெரிக்க நாட்டின் தூதர்கள் நியமனம் குறித்த செனட் வெளியுறவுத்துறை உறுப்பினர்களின் முன் சாட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட உள்ள எரிக் கார்செட்டி செனட் சட்டவல்லுனர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது,
இந்தியா அண்டை நாடுகளுடனான கடினமான சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளது.இந்தியாவின் திறனை வலுப்படுத்தும் நமது முயற்சிகளை இரட்டிப்பாக்க எண்ணுகிறேன்.அதன் எல்லைகளை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகளை தடுக்கவும் பயங்கரவாத எதிர்ப்பில் ஒன்றிணைந்து ஈடுபடுவோம் என்று கூறினார். மேலும், இந்திய கலாச்சாரம் மற்றும் மத வரலாற்றையும் அறிந்துள்ளதாக அவர் கூறினார்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அவருடைய நியமனம், செனட் வெளியுறவுத்துறையால் அங்கீகரிக்கப்பட்டதும், முழு செனட் உறுப்பினர்களுக்கும் செல்லும். அங்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்றதும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி நியமனம் செய்யப்படுவார்.
அமெரிக்காவின் ஜனநாயக செயல்பாட்டாளரும் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயருமான 50 வயதான எரிக் கார்செட்டி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் இந்திய தூதராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.எரிக் கர்செட்டி, ஜோ பைடனுக்கும், கமலா ஹாரிசுக்கும் மிகவும் நெருக்கமானவர்.
அமெரிக்காவின் 2-வது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்சில் 2013ம் ஆண்டு முதல் அவர் மிகவும் புகழ்பெற்ற மேயராக பணியாற்றியவர்.அமெரிக்க கடற்படையில் உளவுத்துறை அதிகாரியாக 12 ஆண்டுகள் பணியாற்றியவர்.
அவர் லண்டன் பொருளாதார மற்றும் அரசியல் பள்ளியில் பட்டம் பெற்றவர்.அவர் ஒரு ரோட்ஸ் ஸ்காலர்ஷிப் பெற்ற அறிஞர் ஆவார். ரோட்ஸ் ஸ்காலர்ஷிப் என்பது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கான சர்வதேச முதுகலை விருது ஆகும்.
இத்தகைய சூழ்நிலையில், எரிக் கர்செட்டி அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமனம் பெற்றபிறகு, இருநாடுகளின் உறவுகள் உச்சம் பெறும். நல்லெண்ணம் இன்னும் மேம்படும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் நம்பிக்கையாகவும் இருக்கிறது.