நியூயார்க்,
உலக அளவில் கொரோனா வைரஸ் தெற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 2,40,497 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் 210 நாடுகளில் மொத்தம் 34,26,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,94,014 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா முதலாவது இடத்தில் உள்ளது.
இந்த சூழலில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் சில மருந்துகள் சோதனை அடிப்படையில் உள்ளன. சில மருந்துகள் பரிசோதனை செய்யப்பட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு மருந்தில்லாமல் துணை சிகிச்சைகள் மூலம் நோயாளிகளை ஓரளவுக்கு மீட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் கைலீட் சயன்சஸ் நிறுவனத்தின் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவிர் (remdesivir) மருந்தை அவசர சிகிச்சைக்குப் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ( யு.எஸ்.எஃப்.டி.ஏ) அனுமதி அளித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு இதனைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தைப் பயன்படுத்தும் உரிய காலஅளவு குறித்து அதாவது எத்தனை நாட்களுக்கு இதனைக் கொடுக்கலாம் என்பது தற்போது நடைபெற்றுவரும் கிளினிக்கல் ஆய்வுகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இயல்பாக ஒரு மருந்தைச் சோதனை செய்த நாளில் இருந்து 90 நாட்களில் ஒப்புதல் வழங்கப்படும் என உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹான் தெரிவித்தார். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்தோருக்கும், சுவாசக் கருவிகளின் உதவி தேவைப்படுவோருக்கும் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்தைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கைலீட் சயின்சஸ் நிறுவனம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேருக்குப் பத்து நாள் சிகிச்சைக்குத் தேவைப்படும் 15 லட்சம் டோஸ் மருந்தை அமெரிக்க அரசுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் அமெரிக்க அரசுடன் கைலீட் நிறுவனம் இந்த மருந்தை பிறநாடுகளுக்கு அனுப்பும் நடைமுறை பற்றி விவாதித்து வருகிறது.