வாஷிங்டன்,
உலகையே ஆட்டிப்படைத்து வந்த அமெரிக்க நாட்டை இப்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஆட்டிப்படைத்து வருவது பெரும்சோகம்.
சீனாவில் இந்த கொடிய கொரோனா வைரஸ் தோன்றினாலும், மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்றால் முதல் இடத்தில் அமெரிக்காதான் உள்ளது. அங்கு நேற்று மதிய நிலவரப்படி 1 கோடியே 53 லட்சத்து 91 ஆயிரத்து 700 பேரை இந்த பெருந்தொற்று தாக்கி உள்ளது.
அங்கு கொரோனாவால் ஏற்படுகிற உயிர்ப்பலிகளும் அமெரிக்க மக்களை மீளாத்துயரில் ஆழ்த்தி இருக்கின்றன.
ஒவ்வொரு நாளும் பலியின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.
அமெரிக்காவில் ஒரு நாள் உயிர்ப்பலியைப் பொறுத்தமட்டில், கடந்த ஏப்ரல் 15-ந்தேதி ஒரே நாளில் 2,752 பேர் பலியானதுதான் உச்சக்கட்ட அளவாக இருந்தது.
அந்த எண்ணிக்கை, கடந்த வாரம் முறியடிக்கப்பட்டது. கடந்த வாரம் ஒரே நாளில் 2,885 பேர் பலியாகி இருந்ததே இதுவரை இல்லாத அளவு அதிக உயிர்ப்பலியாக பதிவானது.
கடந்த வாரம் 7 நாளில் சராசரி உயிர்ப்பலி எண்ணிக்கை 2,249 ஆகும். இது இதற்கு முன்பு ஏப்ரல் 17-ந்தேதி நிலவரப்படி பதிவான 7 நாள் சராசரியான 2,232-ஐ கடந்தது.
நேற்று முன்தினம் (புதன்கிழமை) இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 3,011 பேர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர். அதாவது ஒரு நிமிடத்துக்கு 2 பேருக்கு மேல் இறந்துள்ளனர். இது புதிய உச்சம் ஆகும்.
அமெரிக்காவில் மொத்த உயிர்ப்பலி எண்ணிக்கை 2 லட்சத்து 89 ஆயிரத்தை கடந்து விட்டதாக அங்குள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய புள்ளிவிவரம் நேற்று மதியம் காட்டியது.
இதற்கிடையே டெக்சாஸ் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எல் பாசோ முதல் லுபாக் வரையில் உள்ள ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்பெண்ட் பகுதி ஆபத்தான பகுதியாக காட்சி அளிக்கிறது. அங்கு 12 ஆயிரம் சதுர மைல்களுக்கு ஒரு ஆஸ்பத்திரிதான் உள்ளது என அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
ஆல்பைன் நகர், அமெரிக்காவின் கொரோனா ஹாட்ஸ்பாட் என்று சொல்லக்கூடிய அளவில் மிக வேகமாக கொரோனா பரவி வருகிறது. பரிசோதனைக்கு வருவோரின் கார்கள் குவிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேற்கு டெக்சாஸின் கரடு முரடான, கிராமப்புறங்களில் தினசரி சோதனைகளை நடத்துவதற்கு மாவட்ட சுகாதாரத்துறை அங்கு இல்லை. முன்கூட்டியே பதிவு செய்கிறவர்களுக்கு சில கிளினிக்குளில் பரிசோதனை நடத்தப்படுகின்றன.
கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்றுதான் அமெரிக்காவின் தீராத சோகத்துக்கு முடிவு கட்டும் என்று அந்த நாட்டு மக்கள் எண்ணி அதற்காக காத்திருக்கிறார்கள்.