நியூயார்க்,
ஆஸ்கார் விருதை வென்ற பிரபல ஹாலிவுட் இயக்குனர் பால் ஹாகிஸ் (வயது 69). கனடாவில் பிறந்தவரான இவர் திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் எழுந்தன. இதில் பால் ஹாகிஸ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பெண்கள் தனித்தனியாக அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இதுதொடர்பான வழக்குகள் அமெரிக்க கோர்ட்டுகளில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு பால் ஹாகிஸ் அவரது வீட்டில் வைத்து தன்னை வன்கொடுமை செய்ததாக ஹாலே பிரெஸ்ட் என்கிற பெண் கடந்த 2017-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் நியூயார்க் நகர கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.
வழக்கை விசாரித்த நீதிபதி, பால் ஹாகிஸ் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தார். தொடர்ந்து, ஹாலே பிரெஸ்ட்டை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக அவருக்கு பால் ஹாகிஸ் 7.5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.60 கோடி) இழப்பீடு வழங்க வேண்டுமென தீர்ப்பளித்தார்.
எனினும் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வரும் பால் ஹாகிஸ் இந்த தீர்ப்பு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும், தனக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்க தனது சட்டக்குழு உதவியுடன் தொடர்ந்து போராட உள்ளதாகவும் கூறியுள்ளார்.