வாஷிங்டன்,
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். இவரை ஐ.நா., மற்றும் அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதி என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது. லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனரான இவர், அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜமாத் உத் தவா என்ற பெயரில் இயக்கத்தை நடத்தி வருகிறார்.
மேலும், மில்லி முஸ்லீம் லீக் என்ற புதிய கட்சியையும் தொடங்கினார். பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மில்லி முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் என ஹபீஸ் சயீத் அறிவித்துள்ளார். தேர்தல் கமிஷன் முதலில் மில்லி முஸ்லீம் கட்சியை அங்கீகரிக்க மறுத்த போதிலும், நீதிமன்ற உத்தரவு பெற்று மில்லி முஸ்லீம் லீக் கட்சியை பதிவு செய்ய ஹபீஸ் சயீத் அனுமதி பெற்றார். இந்த நிலையில், ஹபீஸ் சயீத்தின் மில்லி முஸ்லீம் கட்சியை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்து உள்ளது.