வாஷிங்டன்,
அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த பயோன்டெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இதை அமெரிக்காவில் அவசரமாக பயன்படுத்த ஒப்புதல் கோரி விண்ணப்பித்து இருந்தன.
இந்த நிலையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் துறையின் ஆலோசனை கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிக பெரும்பான்மை அடிப்படையில், பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியில் சில பக்கவிளைவுகள் இருந்தாலும், அது ஏற்படுத்த போகும் பலனை கருத்தில் வைத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
எப்.டி.ஏ(அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் துறை) அங்கீகாரம் பெற்ற உடனேயே இந்த தடுப்பூசியை நாடு முழுவதும் விநியோகிக்கத் தொடங்குவதாகவும், முதல் தடுப்பூசிகள் அடுத்த வார தொடக்கத்தில் வழங்கப்படும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக அமெரிக்காவில் கொரோனாவால் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பைசர் தடுப்பூசி வரவு அமெரிக்காவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து, பக்ரைன் மற்றும் சவுதிஅரேபியா ஆகிய நாடுகள் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.